ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பு..

 
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பு..


இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளது..

ஈரோடு கிழக்கு தொகுதியின்  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன்  ஈவேரா மறைவை ஒட்டி,  இந்த தொகுதியில் அடுத்த மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.  இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதேபோல் ஒவ்வொரு  அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் தேர்தல் நடைபெறக்கூடிய ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதுமாக தீவிரமான கண்காணிப்பு மற்றும் சோதனையை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது. இதற்காக மொத்தமாக ஆறு பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன அதாவது 3 நிலை கண்காணிப்பு குழுக்களும்,  மூன்று பறக்கும் படைகள் என மொத்தம் 6 குழுக்கல் தேர்தல் கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு

இந்த நிலை கண்காணிப்பு குழுக்களை பொறுத்தவரையில் தொகுதி எல்லையில் நின்று,  தொகுதிக்குள் வரக்கூடிய வாகனங்களை முழுமையாக தணிக்கை செய்து வருகின்றனர்.  பறக்கும் படையினர் தொகுதிக்குள்ளாக சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒவ்வொரு குழுவிலும் ஒரு அலுவலர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள்,  ஒரு வீடியோ கேமரா பதிவாளர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  இந்த ஒவ்வொரு குழுவும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றக் கூடிய வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில்,  50 ஆயிரத்திற்கும் மேல் தொகை எடுத்துச் செல்லும் நிலையில் அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

தேர்தல்

 அதேபோன்று 10,000 ரூபாய்க்கும் அதிகமான பரிசு பொருட்களை கொண்டு செல்லும்போது அதற்கும் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி இந்த பறக்கும் படையினர் கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆவணங்கள் இல்லாமல் அதிகப்படியான தொகை மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்து வந்தால் அவற்றை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் . அடுத்த கட்டமாக அடுத்த சில தினங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் களைக்கட்டும் நிலையில் பறக்கும் படையினரின் சோதனை என்பது இன்னும் தீவிரப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.