2 நாள் மழைக்கே இற்றுப்போயிடுச்சாம் தமிழகம்- எடப்பாடி பழனிசாமி

 
edappadi palanisamy

திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அதிமுக மீது குற்றம் சொல்லி பிரச்சனைகளை திசை திருப்ப வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Former TN CM's personal assistant held for cheating people by promising  govt jobs | Cities News,The Indian Express

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியா அரசின் முதலமைச்சர் அவர்களின் இன்றைய பேட்டியில், அம்மாவின் ஆட்சியில் 10 ஆண்டுகளில் நிறைவேற்றாததை, ஓராண்டில் நிறைவேற்றிவிட்டதாக மார்தட்டியுள்ளார். அடுத்தவர் பெற்ற குழந்தைக்கு பெயர் வைப்பதையே வாடிக்கையாகக் கொண்ட இந்த ஆட்சியாளர்கள், அம்மா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் அரசிலும் திட்டமிடப்பட்டு நடைபெற்று வந்த பணிகளில் ஒருசிலவற்றை தொடர்ந்து செய்துவிட்டு "ஊரில் கல்யாணம், மாரில் சந்தனம்" என்ற வகையில் நெஞ்சை நிமிர்த்தி செல்வது கேலிக்குரியதாகும். 

5 ஆண்டுகள் சென்னை மேயராகவும், 5 ஆண்டுகள் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின் அவர்கள், சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவோம் என்று அலங்கார வார்த்தைகளால் அபிஷேகம் செய்தார். அவர் மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் தமிழ் நாடு முழுவதும், குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை உருவாக்கி, வெள்ளம் தேங்காத நிலையை ஏற்படுத்தியிருந்தால் எங்களுடைய 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில் நாங்கள் எதுவும் செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. 

ஆனால், திரு. ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகராட்சி மேயராக 5 ஆண்டுகளும், உள்ளாட்சித் துறை அமைச்சராக 5 ஆண்டுகளும் இருந்தபோது ஒரு துரும்பும் கிள்ளிப்போடவில்லை. இதனால்தான். அம்மாவின் அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.சென்னைக்கு மட்டுமல்ல, தமிழ் நாடு முழுமைக்கும் எங்கள் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத் திட்டப் பணிகளை மக்கள் நன்கறிவார்கள்.


எனது தலைமையிலான ஆட்சியில், 4 ஆண்டுகளில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 196 கி.மீ. நீள ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், 2015-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேங்கியிருந்த 306 இடங்கள், 2020-ஆம் ஆண்டில் 3-ஆக குறைக்கப்பட்டது. சென்னையில் 210 நீர்நிலைகளில், 140 நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Edappadi K Palaniswami Role in Tamil Nadu India Politics and Elections:  About Edappadi K Palaniswami from AIADMK Political Career and History

இந்த ஆண்டு பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னை தத்தளித்ததற்கான காரணம் வெள்ள நீர் கால்வாயில் இந்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டிய பணியை தொடராமலும், திட்டமிட்டு முழுமையாக முடிக்காததாலும், வெள்ள நீர் போக முடியாமல் நிறைய இடங்களில் தேங்கியுள்ளது. இன்னும் பெருமளவில் பருவ மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


இனியும், இந்த ஏமாற்று அரசை நம்பாமல், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளியே செல்லும்போது, பாதையை கடக்கும் சூழ்நிலையில் மின்சார கேபிள்கள், நீர் தேங்கிய பள்ளங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இனியும் எதற்கெடுத்தாலும் அம்மாவின் அரசின் மீது குற்றம் சொல்லி பிரச்சனைகளை திசை திருப்பாமல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் அனைத்து மக்களையும் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்த விடியா தி.மு.க. அரசுக்கு உண்டு. மேலும், எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க முறையான வழிமுறைகளை கையாள வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.