தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக ஆளுநரிடம் புகார் அளித்தேன் - இபிஎஸ் பேட்டி

 
eps

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக ஆளுநரிடம் புகாரளித்தேன்  என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று நண்பகல் 12.45 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்திப்பானது நடைபெற்றது.  இந்த சந்திப்பின்  போது கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் உடன் சென்றனர்.  திமுக அரசின் திட்டங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதேபோல் தமிழகத்தில் நிகழ்ந்து வரும் குற்ற சம்பவங்களால் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் தெரிவித்தார். 

ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக ஆளுநரிடம் புகாரளித்தேன். கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் மத்திய அரசு முன்கூட்டியே எச்சரித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் கனியாமூர் பள்ளியில் வன்முறை ஏற்பட்டது. அதிமுக ஆட்சியில் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருந்த நிலையில், திமுக ஆட்சியில் தட்டுப்பாடு உள்ளது. பொம்மை முதல்வராக ஸ்டாலினும், திறமையற்ற அரசாக தமிழக அரசும் உள்ளது. நிர்வாக திறமையின்மை காரணமாக போதைப்பொருளை தமிழக அரசால்  தடுக்க முடியவில்லை அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் நிலவுகிறது. இவ்வாறு கூறினார்.