கொடநாடு வழக்கு- தன்னை சிக்கவைக்காமல் இருக்க தனது பதவியை இளங்கோவனுக்கு வழங்கிய எடப்பாடி பழனிசாமி

 
இளங்கோவன்

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை தனது நெருங்கிய ஆதரவாளரும், தனக்கு நிழலாகவும் உள்ள இளங்கோவனுக்கு விட்டுக் கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

  
தமிழகம் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்  நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது.  நேற்று முன் தினம் அதாவது  திங்கள் கிழமை அன்று மாவட்ட செயலாளர்களுக்கான விருப்ப மனுக்கள் அந்தந்த மாவட்ட அதிமுக அலுவலகங்களில் வழங்கப்பட்டது. அதன்படி சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கான  விருப்பமனு ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் பெறப்பட்டது. அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் மற்றும் ஊட்டி மாவட்ட செயலாளர் வினோத் ஆகியோர் தேர்தல் மேற்பார்வையாளராக இருந்து விருப்ப மனுக்களை பெற்றனர். அப்போது சேலத்தில் முகாமிட்டிருந்த அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் விருப்பம் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தான் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராகவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக்கூறப்பட்டதோடு,  ஓமலூர் கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்களும்,  கட்சி நிர்வாகிகளும் அன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர் கிரீடம் சூட்டி மாலை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  

அப்போது புன்முறுவலுடன் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். திங்கள் கிழமை சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைக்கான விவாதம் நடந்த நிலையில்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்திற்கு செல்லாமல்,  சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு தனது விருப்ப மனுவை தாக்கல் செய்திருந்தார்.  கட்சியின் மிகப்பெரிய பதவியான இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை வகித்து வரும் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கும் ஆசைப்படுகிறார் என அதிமுகவினர் மத்தியில் பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய ஆதரவாளரான இளங்கோவன் பெயர் இடம்  பெற்றுள்ளது, கோடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் விசாரணை வளையத்திற்குள் இளங்கோவனும் உள்ளார்.  இந்த நிலையில் இளங்கோவனுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வழங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.