வரி உயர்வை மக்கள் தலையில் சுமத்தியதுதான் திராவிட மாடல் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

 
EPS

மாதம் ஒரு முறை மின்கட்டண வசூல் என்ற திமுக கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது?  என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,
வரி உயர்வை மக்கள் தலையில் சுமத்தியதுதான் திராவிட மாடல் என கூறியுள்ளார். 

 தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்து செப்டம்பர் 16ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 15 மாத கால சர்வாதிகார ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒரு துளி நன்மையும் ஏற்படவில்லை. வரி உயர்வை மக்கள் தலையில் சுமத்தியதுதான் திராவிட மாடல். சொத்து வரி உயர்வுதான் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த முதல் போனஸ். திராவிட மாடல் என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.   ரூ.1000 வீட்டு வரி செலுத்தியவர்கள் இன்று ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டிய அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கூரை வீட்டுக்கு கூட வரி போட்டு மக்களை துன்புறுத்தும் அரசுதான் தி.மு.க.  

EPS

தமிழகத்தில் 52 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பாடாய்படுத்துகிறது தி.மு.க. அரசு. மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி என்ன ஆனது? 500 யூனிட் பயன்படுத்துவோர் 55 சதவீதம் கூடுதலாக மின்சார கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.  கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மக்களை மின் கட்டணம், சொத்து வரி உயர்வின் மூலம் கொடுமைப்படுத்துகிறார்கள். தமிழகத்தின் நிதிச்சுமையை ஏழை, எளிய மக்களின் தலையில் கட்டி துன்புறுத்துகிறார். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். மின்சார கட்டண உயர்வால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இவ்வாறு கூறினார்.