இடைத்தேர்தல் - இபிஎஸ் முக்கிய ஆலோசன : நாளை வேட்பாளர் அறிவிப்பு?

 
eps

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோட்டி ஆலோசனை நடத்தினார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு  கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது.  அக்கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என  இரு தரப்பாக பிரிந்து தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல தேமுதிகவும் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் இருந்து பின்வாங்கியுள்ளது.இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் . முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 16 பேர் கொண்ட தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து இன்று காலை ஈரோடுக்கு வந்தார். பவானி நசியனூரில் உள்ள அவரது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிப்பாடு செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள ரெஸ்டாரண்டுக்கு வந்தார். அங்கு ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயகுமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, பகுதி செயலாளர்கள் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் பூத் கமிட்டி, தேர்தல் வெற்றி வியூகங்கள், பிரசார யுக்தி குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. இதற்கிடையே நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.