அதிமுக அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

 
eps

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்திற்கு வருகை தந்த நிலையில், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில்  உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது, அதிமுக அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.  இதில் காவல்துறையினர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இந்த விவகாரம் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அத்துடன் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, பின்னர் அது நீதிமன்ற உத்தரவின் பேரில் நீக்கப்பட்டது. இந்த விவாகரத்திற்கு பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு ஈபிஎஸ் செல்லவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற அறிவித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார்.இதை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்கிறார்.


இந்நிலையில்  72 நாட்களுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி.எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இதனை தொடர்ந்து தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அறைகளையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்க கூடாது என டிஜிபி அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.