ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து ஓ.பி.எஸ் துரோகம் செய்துவிட்டார் -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

 
eps

ஓ.பன்னீர்செல்வம் செய்தது மிகப்பெரிய துரோகம் எனவும், ரவுடிகளை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியுள்ளார் எனவும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுக பொது குழு கூட்டம் நடத்த ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தாக்கல் செய்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் இன்று காலை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  இதை அடுத்து திட்டமிட்டபடி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்களை குறைத்து பொதுச்செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட்டது. இதனை தொடர்ந்து இடைக்கால் பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். .இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் காலையில் நடந்த மோதலில் காயமடைந்த தொண்டர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.

eps

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: அதிமுக பொதுக்குழு நடக்கும் போது, கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் சமூக விரோதிகள் புகக்கூடும் என தகவல் வந்த உடன் ராயப்பேட்டை போலீஸ் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தோம். ஆனால், இன்று நடந்தது, எங்களுக்கு கிடைத்த தகவல் உண்மை என்பது நிரூபணம் ஆகி உள்ளது. கமிஷனர் போதிய பாதுகாப்பு அளித்ததாக தெரியவில்லை. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மனு அளித்தும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. பன்னீர்செல்வம், அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தது மட்டும் அல்லாமல், ரவுடிகளை அழைத்து கொண்டு நிர்வாகிகளை தாக்கியது கண்டனத்திற்குரியது. தொண்டர்களை தாக்கியது மிகமிக கெடூரமானது. திமுக உதவியுடன் பன்னீர்செல்வம் குண்டர்கள் அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். எந்த ஒரு தலைவராவது தனது கட்சியினரை தாக்குவார்களா ? முதல்வர், துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளராக ஆக்கியதற்கு பன்னீர்செல்வம் தகுந்த வெகுமதியை அளித்துள்ளார். நீங்கள் வளமோடு, அதிகாரத்தோடு இருந்ததற்கு காரணம் மாவட்ட செயலாளரும், நிர்வாகிகளும் தான். மனசாட்சி இல்லாத மிருகத்தனமான மனிதர்களுக்கு தான் இந்த எண்ணம் வரும். சுயநலவாதி என கூறலாம். பொதுக்குழுவுக்கு வருவார் என எதிர்பார்த்து இருக்கைகளை போட்டு வைத்தோம். ஆனால் வரவில்லை.
 

eps

மீன்பாடி வண்டியில் கற்களை கொண்டு வந்த ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கண்மூடிதனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களை வீசியதை தடுக்காத போலீசார் எங்களது நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். போலீசாரும் ரவுடிகளோடு சேர்ந்து மாவட்ட செயலாளரை, நிர்வாகிகளை தாக்கியது கொடுமையானது. ரவுடிகளை அழைத்து வந்து கட்சியினரை பன்னீர்செல்வம் தாக்கியது கண்டிக்கத்தக்கது. அதிமுக.,வில் உயர்ந்த பதவியை வகிந்த அவர் செய்தது மிகப்பெரிய துரோகம். ரவுடிகளை அழைத்து வந்து பன்னீர்செல்வம் தாக்குதல் நடத்தியது வேதனை அளிக்கிறது. 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியின் நிர்வாகிகளுக்கே இந்த நிலை தான் என்றால், சாமானியர்களுக்கு என்ன நிலை என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.துரோகிகளுடன் இணைந்து ஸ்டாலின் போட்ட சதி திட்டம் தான் இது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பன்னீர்செல்வம், எந்த காலத்திலும் மக்களுக்கு நன்மை செய்தது கிடையாது. 

அப்பகுதி மக்களுக்கும் நன்மை செய்தது கிடையாது. சுயநலவாதி. வேண்டுமேன்றே திட்டமிட்டு ஆவணங்களை எடுத்து சென்றுள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை அள்ளி சென்றனர். அதற்கு போலீஸ் பாதுகாப்பு எவ்வளவு கேவலம். யார் தவறு செய்தாலும், அவர்களுக்கு பாடம் புகட்டுவோம். திட்டமிட்டு திமுகவிற்கு வக்காலத்து வாங்கி பேசியதால் தான் பன்னீர்செல்வம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.அதிமுக அலுவலகம் ஒன்றும் கார்பரேட் சொத்து அல்ல. அது தொண்டர்களின் சொத்து. எம்ஜிஆர் கொடுத்த சொத்து. எத்தனையோ தலைவர்கள் இருந்த போதும் ஆவணங்களை எடுத்து சென்றனரா? அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வேண்டுமென்றே சீல் வைத்துள்ளனர். நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று அதிமுக தலைமை அலுவலகம் புதுப்பொலிவுடன் திறக்கப்படும். இவ்வாறு கூறினார்