ஒரு லட்சம் ரூபாய்க்கு ரூ.8,000 வட்டி! பொதுமக்களிடம் வசூலை அள்ளிய நிதி நிறுவனத்தில் அதிரடி சோதனை

 
international financial services ifs chennai

இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிறுவனம் தொடர்பாக தமிழக முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூர் அடிப்படையாகக் கொண்டு இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்கள் லட்சுமி நாராயணன் வேதநாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8,000 ரூபாய் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை இந்நிறுவனம் வசூல் செய்துள்ளது. அவ்வாறு வசூல் செய்யும் நபர்களிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு இரண்டு சதவீத வட்டிக்கு கடன் வாங்குவதாக ஒப்பந்தம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இவ்வாறு வசூல் செய்த பணத்தை பங்கு வர்த்தகத்தின் முதலீடு செய்து அதிக லாபம் பார்ப்பதாகவும் அந்த லாபத்தில் முதலீட்டாளர்களுக்கு பங்கு தருவதாகவும் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்தனர். பல்வேறு வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து முதலீடு செய்தவர்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒரு லட்ச ரூபாய்க்கு 8000 ரூபாய் மாதா மாதம் கிடைத்ததை அடுத்து பலரும் அதிகப்படியான தொகையை முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இதேபோன்று ஆருத்ரா கோல்ட் டிரேடிங்  என்ற நிறுவனம் ஒரு லட்ச ரூபாய்க்கு 30 ஆயிரம் ரூபாய் மாசம் தருவதாக கூறி மோசடி செய்த விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சுமார் 1,400 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விவகாரம் விஸ்வரூபம்  எடுத்ததை அடுத்து, இதேபோன்று மோசடியில் ஈடுபடும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தின் மீதும் புகார்கள் எழுந்தன. குறிப்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்த கூறி பொருளாதார குற்றப்பிரிவுக்கு பரிந்துரை செய்தார். தற்போது தமிழக முழுவதும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்திற்கு தொடர்பான 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள தாமரை டெக் பார்க் கட்டிடத்தில் செயல்படும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் கார்ப்பரேட் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று  வேலூர் காட்பாடியிலிருக்கும் தலைமை அலுவலகம், அரக்கோணம், நெமிலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட அலுவலகங்களிலும் தீவிர சோதனை நடக்கிறது. காட்பாடி வி.ஜி.ராவ் நகரிலிருக்கும் லட்சுமி நாராயணன்  வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக பணத்தை முதலீடு செய்தவர்கள் புகார் அளிப்பதை தடுப்பதற்காக whatsapp குழு அமைத்து பலருக்கும் இன்டர்நேஷனல் பைனான்ஸ் அண்ட் சர்வீஸ் உரிமையாளர் லட்சுமி நாராயணன் ஆடியோ வெளியிட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தொழிலதிபர் சரவணகுமார் மற்றும் கார்த்திக் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரத்தின் தொழிலதிபரான சரவணகுமார் என்பவர் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தில் நடத்தும் மோகன் பாபு என்பவர் மூலம் பணத்தை முதலீடு செய்ததாக தெரிவித்துள்ளார். தான் முதலீடு செய்து லாபம் பார்த்ததால் தன் நண்பர்கள் உறவினர்கள் என ஆயிரக்கணக்கான நபர்களை கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து முதலீடு செய்ய வைத்ததாக தெரிவித்துள்ளார். தன்னைப் போன்று ஆயிரக்கணக்கான நபர்கள் தமிழகத்தில் இந்த நிறுவனத்திற்கு முதலீடை வாங்கி தந்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார். தான். MARC என்ற பெயரில் நிறுவனத்தை ஆரம்பித்து பலரிடமும் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை வசூல் செய்து கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் இருந்து இயக்குனர்கள் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்து விட்டு தலைமறைவானதால் உயர்நீதிமன்றத்தை நாடியதாகவும் தெரிவித்துள்ளார். 6000 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை வசூல் செய்து மோசடி செய்துள்ளதாக தாங்கள் புகார் அளித்ததில் அடிப்படையிலேயே இன்று பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தெரிவித்துள்ளார். புகார் அளித்த தன்னுடைய வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றை அதிகாரிகள் சீல் வைத்துவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உண்மையான குற்றவாளிகளான இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு தெரிவித்துள்ளார். சோதனையின் முடிவில் தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு பேரிடம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் பணம் தொடர்பான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்