2வது முறையாக தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை திருப்பி அனுப்பிய இபிஎஸ் தரப்பு

 
eps

மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு அதிமுகவிற்கு  தலைமை தேர்தர் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அந்த கடிதத்தை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்தியாவில் மக்களவை மற்றும்  சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஆனாலும்  வேலை தேடி பிற மாநிலங்களுக்கு செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தேர்தல் சமயத்தில் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க முடியவில்லை.  இதனால் 100% வாக்குப்பதிவு என்பது சாத்தியப்படாமல் உள்ளது. இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ‘ஆர்விஎம்’ (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய  இருக்கிறது.

election commision

இது தொடர்பாக  செயல் விளக்க கூட்டம் ஜன.16-ம் தேதி நடைபெறுகிறது.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை  இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ,  அனைத்துக்கட்சிகளுக்கும்  கடிதம் அனுப்பியிருந்தார். அதில் அதிமுகவிற்கு அனுப்பிய  கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தாலும்,  அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் இந்தக் கடிதத்தை அதிமுக ஏற்க மறுத்துவிட்டனர்.

sahu

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என்று கூறிய அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் அந்தக் கடிதத்தை திருப்பி அனுப்பினர். இந்நிலையில் இந்தக் கடிதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்திருந்தார்.   அதில், இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படி தான் அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக  தெரிவித்தார்.  இந்நிலையில், மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்  என்று குறிப்பிடப்பட்டிருக்கும்   அதே கடிதத்தை , தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பினார்.  

இந்நிலையில், 2-வதாக வந்த அந்த கடிதத்தையும் தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது. இதனால் 16-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.