இபிஎஸ் புதிதாக நியமித்த பொறுப்பாளர்களை அங்கீகரிக்கக் கூடாது : தேர்தல் ஆணையத்துக்கு லெட்டர் போட்ட ஓபிஎஸ்..

 
ops

எடப்பாடி பழனிச்சாமியால்  அதிமுகவில்  புதிதாக  அறிவிக்கப்பட்ட  பொறுப்பாளர்களை  அங்கீகரிக்க கூடாது என ஓ.பன்னீர் செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு  கடிதம் அனுப்பியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.   இதனையடுத்து,  அதிமுக துணை பொது செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதனையும், அதிமுக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணியையும் நியமித்து எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.  தொடர்ந்து  முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஓஎஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, பெஞ்சமின், ஆர்.காமராஜ், முன்னாள் சபாநாயகர் ஆர்.தனபால் உள்ளிட்ட 11 பேரும்   அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்படுவதாகவும்  அறிவித்திருந்தார்.

admk office

பொன்னையன் பேசியதாக  வெளியான் சர்ச்சை ஆடியோவை தொடர்ந்து  அமைப்புச்  செயலாளராக இருந்த அவர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலராக மாற்றம் செய்யப்பட்டார்.   அதேநேரம்  ஓ.பன்னீர்செல்வமோ,   எடப்பாடி பழனிசாமி அறிவித்த எந்த பொறுப்புகளும் செல்லாது என்று கூறிவருகிறார்.   இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ள அவர்,  பழனிச்சாமி அறிவித்த பொறுப்பாளர் நியமனங்கள் அனைத்தும் அதிமுக விதிகளுக்கு புறம்பானது என்று  குறிப்பிட்டுள்ளார்.  மேலும்  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் அதிகாரமற்ற நபர்களால் இந்த நியமங்கள் மேற்கொள்ளப்பட்டதாக  அவர் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.  

ops

அத்துடன் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழவே செல்லாது என்பதால்,  இடைக்கால பொதுச்செயலாரை தேர்வு செய்ததும் செல்லாது என்று பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார்.  மேலும்  ஏற்கனவே அனுப்பியிருக்கும் மனுக்களையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு பொதுக்குழு தீர்மானங்களைம், பொறுப்பாளர்கள் நியமனங்களையும்   அங்கீகரிக்க கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம்  தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார்.