சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு?

 
ep

இந்தாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற திங்கள் கிழமை தொடங்கவுள்ள நிலையில், அதனை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஒவ்வொரு வருடமும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற திங்கள் கிழமை, அதாவது நாளை மறுநாள் தொடங்க உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. அதன்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைக்க உள்ளார்.  அவர் உரையாற்றி முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தமிழாக்கத்தை வாசிப்பார்.  ஆளுநர் உரை முடிந்ததும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மரபுபடி வழியனுப்பி வைப்பார்கள். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்வார்கள். இதனை தொடர்ந்து 10ம் ந்தேதி சட்டசபை கூடியதும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது. 

tn assembly

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்.  இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத் தொடரிலும் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணை தலைவர் என பங்கேற்றால் தங்கள் தரப்புக்கு அது பின்னடைவாக கருதப்படும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டமன்ற கூட்டத் தொடரை எடப்பாடி தரப்பினர் புறக்கணிக்கலாம் என  கூறப்படுகிறது. அதே நேரத்தில் சட்டமன்ற வாயில் முன்பாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.