இந்த நாட்களில் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லை..

 
இந்த நாட்களில் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லை..

தொடர் மழைக் காரணமாக சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.  

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  அமைந்துள்ளது பிரசித்திபெற்ற  சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில். ஒவ்வொரு மாதமும் இந்தக் கோயிலில் பிரதோ‌ஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி அந்த நாட்களில் மட்டுமே பக்தர்களும்  மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அந்தவகையில் ஐப்பசி மாதம் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருந்த நிலையில், அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

சதுரகிரி மலை

 தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்திருக்கிறது. இதனால் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 5-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன்  பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் மேற்கண்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு யாரும் வர வேண்டாம் எனவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.