மாமல்லபுரம் பகுதியில் இன்று முதல் ட்ரோன் கேமரா பறக்க தடை!!

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் இன்று முதல் ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் நடைபெறுகிறது. 187 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கும் நிலையில் ஃபோர் பாயிண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்கு 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சர்வதேச தரத்திலான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ள அரங்கில் 200 வீரர்களும் தற்போது அமைக்கப்பட்டு வரும் அரங்கில் 500 வீரர்களும் ஒரே நாளில் 700 வீரர்கள் பங்கேற்று விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 28ஆம் தேதி போட்டி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை போட்டி நடைபெற உள்ளது. 227 அணிகளை சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, மாமல்லபுரம் பகுதிகளில் இன்று முதல் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரான் கேமராக்கள் இயக்கப்படும் பட்சத்தில் அவை பறிமுதல் செய்யப்பட்டு, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தயார் செய்யப்பட்டுள்ள அரங்கை இன்று பார்வையிடுகிறார். முதல்வர் வருகையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.