இரட்டை அர்த்த பேச்சு - சைதை சாதிக் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு

 
s

ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 சென்னை ஆர். கே. நகரில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக பொதுக்கூட்டம் நடந்த போது,  அதில் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் பாஜகவின் மகளிர் அணி பிரிவில் இருக்கும் நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி உள்ளிட்டோரை ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசினார்.  இது பெரும் சர்ச்சையானது.

sa

 இதற்கு குஷ்பூ கண்டனம் தெரிவித்திருந்த நிலையில்,   திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி அதற்கு மன்னிப்பு கேட்டார் . ஆனால் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக மகளிர் அணி சார்பில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.  சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் முழுவதும் பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெறும் என்றும் மகளிர் அணி அறிவித்திருந்தனர்.

 இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கொட்டும் மழையில்  இந்த போராட்டம் நடந்தது. 

 போலீசாரின் அனுமதி இன்றி இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.  இந்த நிலையில் சைதை சாதிக் மீது கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் பற்றி தரக்குறைவாக பேசுதல் , பெண்ணின் மானத்திற்கு பங்கம் விளைவித்தல் உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.