நாளை மறுநாள் அமாவாசை.... செயற்குழு கூட்டங்களை நடத்த தவறி விடாதீர்கள்!

 
PMK

பாமக செயற்குழு கூட்டங்களை  25ஆம் தேதி கட்டாயம் நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு நிலையிலும் உள்ள நிர்வாகிகளை அழைத்து கலந்தாய்வு நடத்தி வருகிறேன். மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர, பேரூர் செயலாளர்களையும் அழைத்து பேசி தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான ஆட்சி அமைய நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களுக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறேன். அனைத்து நிலை நிர்வாகிகளையும் கடந்த 3 மாதங்களில் ஒருமுறையாவது சந்தித்து பேசியிருக்கிறேன்.

pmk

அடுத்தக்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை நானே எனது கைகளால் வழங்கி வருகிறேன். இவ்வொரு நாளும் 150 முதல் 200 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வருகிறேன். உங்களை சந்திப்பதை விட மகிழ்ச்சியான விஷயம் எனக்கு எதுவுமில்லை. அந்த வகையில் அரசியல் பயிலரங்கத்தில் உங்களை சந்திக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு மகிழ்ச்சியாக கழிகிறது. இன்னும் சில வாரங்களில்  மாவட்ட நிர்வாகிகளுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கி விடுவேன்.அதன்பிறகும் பயிற்சி வகுப்புகள், கலந்தாய்வுகள், ஆய்வுக்கூட்டங்கள் என நமது சந்திப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். நான் எவ்வாறு எனது கடமையை சளைக்காமல் செய்கிறேனோ, அதேபோல் நீங்களும் உங்கள் கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு ஆகும்.

மாதத்திற்கு ஒரு முறை கிளை, பேரூர், ஒன்றிய, மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். பவுர்ணமி நாளில் கிராமக் கிளை அளவிலான செயற்குழு கூட்டமும், அமாவாசை நாளில் ஒன்றிய, நகர, பேரூர் கூட்டங்களும் கூட்டப்பட வேண்டும். ஆங்கில மாதத்தின் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று நான் உங்கள் அனைவருக்கும் தொடர்ந்து கூறி வருகிறேன். கடந்த ஜூலை மாதம் 2-ஆம் தேதி நான் உங்கள் அனைவருக்கும் 20 அன்புக்கட்டளைகளை பிறப்பித்திருந்தேன். அதன்பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டங்களிலும் இதை நான் உங்களுக்கு நினைவூட்டினேன். ஒரு கட்டத்தில் இந்த நாளில் தான் இந்தக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதைக் கூட தளர்த்தி அமாவாசை, பவுர்ணமி, ஆங்கில மாதத்தின் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில்  எந்தக் கூட்டத்தை வேண்டுமானாலும் நடத்துங்கள் என்று கூறியிருந்தேன். அதேபோல், ஒவ்வொரு கிளைக்கும் 15 பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு கூட்டத்திலும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இந்த பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

pmk
பாட்டாளி மக்கள் கட்சி என்பது மக்களுக்கான இயக்கம்... அது எப்போதும் மக்களுக்காக இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். மாவட்டத்தின் முதல் நாளாகவோ, இரண்டாவது நாளாகவோ, அமாவாசை அல்லது பவுர்ணமி நாளாகவோ இருந்தால் பாட்டாளி சொந்தங்களின் கால்கள் தானாகவே கூட்டம் நடைபெறும் இடத்தை நோக்கி நடக்கத் தொடங்க வேண்டும். அதை அனிச்சை செயலாக மாற்றிக் கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு ஒன்றிய செயலாளரின் தலையாய கடமை ஆகும்.

ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான மாதந்திர செயற்குழு கூட்டங்கள் தொடர்ந்து இரு மாதங்கள் நடத்தப்படவில்லை என்றால், அந்த ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்கள் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது; அவர்கள் பதவியை தாமாகவே இழந்து விடுவார்கள். இதை அனைத்து நிலை நிர்வாகிகளும் கருத்தில் கொள்ள வேண்டும். இதை மாவட்ட செயலாளர்கள் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் மாவட்ட செயற்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும். நாளை மறுநாள் செப்டம்பர் 25&ஆம் தேதி அமாவாசை. அன்று மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான கூட்டங்களை நடத்த தவறாதீர்கள். கூட்டம் நடத்தப்பட்ட விவரங்கள், அதில் கலந்து கொண்டோர் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் மினிட்டாக தயாரிக்கப்பட வேண்டும். அடுத்து நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அவற்றை பார்ப்பதற்கு நான் காத்துக் கொண்டிருப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.