எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆவணங்கள் : தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார் சி.வி.சண்முகம்..

 
cv shanmugam

இந்திய தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி தரப்பு ஆவணங்களை  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்திருக்கிறார்.  நீதிமன்ற உத்தரவு பழனிசாமி தலைமைக்கு ஆதரவாக உள்ளது, தாங்கள் தான் உண்மையான அதிமுக  என்பதை உறுதி செய்யும் ஆவணங்களை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

அதிமுக  கடந்த சில மாதங்களாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓரணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணி என  2 அணிகளாக பிரிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.  கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.   அதேபோல் அன்றைய தினமே ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்குச் சென்றபோது அங்கு கலவரம் வெடித்ததால, தலைமைக் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.  இந்த  இரு விவகாரங்கள் தொடர்பாகவும் நீதிமன்றத்தில்  வழக்குகள் நிலுவையில் உள்ளன.  

eps

அதில், அதிமுக அலுவலகம் தொடர்பான வழக்கில் இபிஎஸ் தரப்பிடம் சாவியை ஒப்படைக்கும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதேபோல் பொதுக்குழு தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டிலும் பொதுக்குழு செல்லும் என்றும், இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.  ஆகையால் நிதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதையும்,  தாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதை உறுதி செய்யும் ஆவணங்களையும்  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளார்.  அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்றும்  மனுவாக தாக்கல் செய்துள்ளனர்.

election commision

மேலும், மொத்தம் உள்ள அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள்   2, 663 பேரில்  2,500 க்கும்  மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும், அதற்கான  பிரமாண பத்திரத்தை அவர்களிடமிருந்து பெற்று  அதன் நகல்களையும் தற்போது தலைமை தேர்தல் ஆணையத்தில் சி. வி. சண்முகம் ஒப்படைத்திருக்கிறார்.  நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சர் அமிச்ஷாவை  நேரில் சந்தித்து பேசினர். இந்தநிலையில் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில்  முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தாக்கல் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.