தனியார் நிறுவனங்களின் பால் விலை உயராமல் இருக்க இதை செய்க - அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை!!

 
TN

தமிழக அரசு, தனியார் நிறுவனங்களின் பால் விலை உயராமல் இருக்க, ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.  

இதுக்குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் உயர்த்திய பால், தயிர் விலையால் சதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது தனியார் நிறுவனங்களின் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.48 லிருந்து ரூ. 50 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ. 50 லிருந்து ரூ. 52 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ. 62 லிருந்து ரூ. 64 ஆகவும், நிறை கொழுப்பு பால் ரூ.70 லிருந்து ரூ. 72 ஆகவும், தயிர் ரூ. 72 லிருந்து ரூ. 74 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

tn

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு மற்றும் தனியார் நிறுவன பால், தயிர், பால் பொருட்களின் விலையானது அவ்வப்போது உயர்த்தப்படுவது ஏற்புடையதல்ல.கடந்த 2022 ஆம் ஆண்டு அரசின் ஆவின் நிறுவனம் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலையை உயர்த்தியதும், தனியார் பால் நிறுவனங்கள் 4 முறை பால் விலையை உயர்த்தியதும், இந்த வருடம் இப்போது தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி விற்பனை செய்வதும் சாதாரண மக்களுக்கு பொருளாதாரத்தில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஆகியவற்றை காரணம் காட்டி பால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி, தனியார் பால் நிறுவனங்களின் பால் விலை உயர்த்தப்படாமல் இருக்க வழி வகை செய்ய வேண்டும்.தனியார் பால் விற்பனை நிறுவனங்களும் நஷ்டத்திற்கு உட்படாமல், பொது மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

gk

பொதுவாக அரசு நிறுவனமான ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆவின் கடை திறந்திருக்கும் போது பால் தட்டுப்பாடில்லாமல் விற்பனை செய்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தமிழக அரசு, அத்தியாவசிய, அவசிய தேவையாக இருக்கின்ற பாலின் விலை உயராமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.