போகியன்று பொருட்களை தீயிட்டு எரிக்காதீர்.. - சென்னை விமான நிலையம் கோரிக்கை..

 
போகியன்று பொருட்களை தீயிட்டு எரிக்காதீர்.. - சென்னை விமான நிலையம் கோரிக்கை.. 

போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை விமான நிலையம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தை பிறப்பின்போது அறுவடைத் திருநாள், தமிழர் திருநாள் என்றழைக்கப்படு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு முதல் நாளான  மார்கழி கடைசி நாளில்  போகிப்பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்..  ‘பழையன கழிதலும்.., புதியன புகுதலும்’என்கிற பழமொழிக்கு ஏற்ப போகிப்பண்டிகையின் போது  பழைய பொருட்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்படுவது வழக்கம்.. ஆனால் இது இன்றைய காலத்திற்கு பொருந்தாது. ஏற்கனவே வாகனங்களில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை போன்றவற்றால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. இதில் போகிப் பண்டிகைக்கு வேறு அதிகாலையிலேயே மக்கள் வீடுகளில் பழைய பொருட்களை எரித்தால் அதிகளவில் காற்று மாசுபடும் சூழல் ஏற்படும்..

போகியன்று பொருட்களை தீயிட்டு எரிக்காதீர்.. - சென்னை விமான நிலையம் கோரிக்கை.. 

  ஆகையால் போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள்  பொருட்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.  இதுபோன்று  பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, அடர்ந்த புகை மற்றும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு, கண், மூக்கு எரிச்சல் போன்ற நோய்களும்  ஏற்படுகின்றன. மேலும்,  புகை மற்றும் பனி மூட்டத்தால்  சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படும்..  அதேபோல் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படும்.

போகியன்று பொருட்களை தீயிட்டு எரிக்காதீர்.. - சென்னை விமான நிலையம் கோரிக்கை.. 

இந்நிலையில் போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என்று  சென்னை விமான நிலையம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை விமான நிலையம்  வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புகைமூட்டம் இல்லாத போகியைக் கொண்டாடுங்கள்! ஏனெனில், அடர் மூடுபனியில் கரும்புகை கலந்தால், அந்த காற்றுமாசு விமான நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பார்வைநிலையை வெகுவாகக் குறைத்து, விமான செயல்பாடுகளை பாதிக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.