தீபாவளி பண்டிகை : நாடு முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாட்டம்..
நாடு முழுவதும் இன்று மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகள், பட்டாசுகள் என தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பார்க்கப்படுகிறது. ஆனால் மதங்களைக் கடந்து அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் நன்னாளாக தீபாவளி இருந்து வருகிறது. இன்று நாடு முழுவதும் மிகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கி தவித்த மக்கள் இந்த ஆண்டு தான் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி, வழக்கம் போல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

இந்த திப ஒளித் திருநாள் என்பது இந்து மத புராணங்களின்படி, யாராலும் அழிக்க முடியாத, ஆனால் தாயால் மட்டுமே அழிக்க முடியும் என்ற சாகாவரம் பெற்ற அசுரன் நரகாசுரனை, கடவுள் திருமாலின் அவதாரமான மகாவிஷ்ணு மிகவும் சமயோஜிதமாக அவரது தாயார் சத்தியபாமாவை வைத்தே அம்பெய்தி கொன்ற நாள்தான் இந்த தீபாவளி. தீமையின் வடிவமான நரகாசுரன், தான் இறக்கும் தருவாயில் தாய் சத்தியபாமாவிடம் இந்த நாளை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடவேண்டும் என்று வரம் கேட்க, சத்தியபாமாவும் மக்கள் தீபம் ஏற்றி, புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி கொண்டாடுவர் என்று வரம் கொடுத்த நாளென்று சொல்லப்படுகிறது. அதேபோல் வட மாநிலங்களில் இந்து மத கடவுள் ராமன் வனவாசத்தை முடித்துவிட்டு அயோத்திக்கு திரும்பிவந்த நாளில், மக்கள் புத்தாடை அணிந்து தீபம் ஏற்றி வரவேற்ற நாள்தான் தீபாவளி என்றும் கொண்டாடப்படுகிறது.

அதன்படி , தீபாவளி திருநாள் அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் வைத்து குளித்து, புத்தாடைகளை அணிந்து இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடுவர். ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் செய்த இனிப்பு உள்ளிட்ட பலகாரங்களை அக்கம், பக்கத்தினருக்ககு கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வர். அந்தவகையில் இன்று தமிழக மக்கள் அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலை முதலே பட்டாசு வெடிக்கும் சத்தம் காதுகளில் ஒலிக்கத் தொடங்கி விட்டது. இந்த தீபாவளி திருநாளில் அனைவரது வாழ்விலும் நன்மைகள் , ஆரோக்கியம் பெருகட்டும்..

