அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - உரிய ஆவணங்கள் இல்லாத 38 காளைகள் தகுதி நீக்கம்

 
Jallikattu

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உரிய ஆவணங்கள் இல்லாத 38 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. 

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. 1,000 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். காளைகளை பரிசோதித்து அனுமதிக்க கால்நடைத்துறை இணை இயக்குனர் நடராஜகுமார், உதவி இயக்குனர் சரவணன் தலைமையில் 30 கால்நடை மருத்துவர்கள், கால்நடை உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் உள்ளனர். காயம் அடைவோருக்கு முதல் உதவி அளிக்க சுகாதாரத்துறை சார்பில் மதுரை மாநகராட்சி மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத்குமார் தலைமையில் 30 டாக்டர்கள், 50 நர்சுகள், உதவியாளர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரும் தயாராக உள்ளனர்.   ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது. 2ம் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 115 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. 2ம் சுற்றின் முடிவில் அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தில் 9 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளார். மேலும், அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் மற்றும் அருண் குமார் ஆகியோர் தலா 6 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளனர்.

இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உரிய ஆவணங்கள் இல்லாத 38 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த 38 காளைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 30 காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.