கீழடி அகழாய்வில் அரிய வகை சூதுபவளங்கள் கண்டெடுப்பு
தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் முதன் முறையாக அரிய வகை சூதுபவளங்கள் 74 கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பிப்ரவரி 13ல் தொடங்கியது. மார்ச் 30ல் அகரம், கொந்தகை ஆகிய தளங்களில் பணிகள் தொடங்கப்பட்டன.இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டு 800க்கும் அதிகமான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொந்தகை தளம் பண்டைய காலத்தில் ஈமகாடாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. கொந்தகை தளத்தில் இதுவரை நடந்த மூன்று கட்ட அகழாய்விலும் 134 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வில் 54 தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் ஒருசில தாழிகள் முழுமையாக கிடைத்துள்ளன. ஒரு அடி முதல் நான்கு அடி உயரம் வரை உள்ள இந்த தாழிகளில் உள்ள பொருட்களை வெளியே எடுக்கம் பணி நடந்து வருகிறது.
இதில் சேதமடைந்த 80வது தாழியினுள் சூது பவளம் எனப்படும் அரிய வகை கற்கள் கண்டறியப்பட்டன. 74 சூது பவழங்கள் தாழியினுள் இருந்தன அவற்றை கீழடி அகழாய்வு தள இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய், காவ்யா தலைமையிலான குழுவினர் இன்று வெளியே எடுத்தனர். குஜராத், மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காணப்படும் சூது பவழம் 2600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு எப்படி வந்திருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே 5ம் கட்ட அகழாய்வில் வராஹி உருவம் பதித்த சூதுபவழம் கண்டறியப்பட்டது. பண்டைய காலத்தில் முதுமக்கள் தாழிகளினுள் இறந்தவர்களை புதைக்கும் போது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், விரும்பிய பொருட்களை வைத்து புதைக்கும் வழக்கம் இருந்தது. அதன்படி கொந்தகையில் இந்த சூதுபவத்துடன் புதைத்திருக்கலாம். தற்போது கிடைத்த சூதுபவழங்கள் நுண்ணிய துளையுடன் கூடியவைகளாக உள்ளதால் இவற்றை மாலையாக அணிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
வெவ்வேறு வடிவங்களுடன் அதிகபட்சமாக மூன்று செ.மீ நீளத்துடன் நன்கு அடர் சிவப்பு நிறத்தில் சூதுபவழங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் பற்றி அறிய ஆய்விற்காக அனுப்பபட உள்ளதாக இணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


