இளங்கோவன் பேசிய வீடியோவை முடக்கணும்! ஜாதி கலவரத்தை துாண்டியவரை கைது செய்யணும்! கமிஷனரிடம் புகார்

 
e

ஈரோட்டில் இளங்கோவனால் வெடித்த சர்ச்சை நாலாபுறமும் வலுத்து வருகிறது.  இளங்கோவனுக்கும் எதிராக கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில்,  அவரை கைது செய்யக்கோரி புகார்களும் குவிந்து வருகின்றன.

அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசியதால் இசையமைப்பாளர் இளையராஜாவை பலரும்  விமர்சனம் செய்து வந்த நிலையில், அவரின் சாதியை குறிப்பிட்டு, சாதியை சாடி ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசி சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார்.  ஈரோட்டில்  நடந்த திராவிடர் கழக நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசியபோது,  ‘’பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. வறுமையில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்தபோது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வதும் ,  பணம் புகழ் வந்த பின்னால் தன்னை உயர்சாதி என நினைத்துக் கொள்வதில் என்ன நியாயம்?பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னவர்தான் இந்த இளையராஜா.  அவர் மனதிற்குள் சங்கராச்சாரியார் என்று நினைப்பு’’என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

எ

இதற்கு திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்திருந்தார்,  ‘’பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும்,  இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில்  நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது’’என்று தெரிவித்திருந்தார்.

திரைப்பட பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் இளங்கோவனுக்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்,  இளங்கோவனை கைது செய்ய வேண்டும் என்று இளமுருகு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த இளமுருகு என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளங்கோவன் மீது புகார் அளித்திருக்கிறார்.  ஈரோட்டில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் இசையமைப்பாளர் இளையராஜா பற்றி மிகவும் அருவருப்பாக பேசியுள்ளார்.  உலகமே போற்றும் ஒருவரை ஜாதி குறித்து இளங்கோவன் பேசியிருப்பது வன்மத்தின் உச்சம்.  அவர் மனதில் கிடக்கும் அழுக்கை காட்டுகிறது என்று குறிப்பிட்டிருக்கும் இளமுருகு ,  இளங்கோவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவுகிறது.   அதை முடக்க வேண்டும் . சாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள இளங்கோவனை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.