சென்னையில் 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு.. வாகன ஓட்டிகள் கடும் அவதி..

 
Diesel

சென்னையில்  பல்வேறு இடங்களில்  இரண்டாவது நாளாக டீசல் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில்,  வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

petrol
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை,  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. நாடு முழுவதும் பெட்ரோல்,  டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு, தொடர்ந்து நீடித்து வருகின்றன. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய,  மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதாக கூறிய போதிலும் பெரிய அளவில் விலை குறைக்கப்படவில்லை. கடந்த 107 நாட்களாக பெட்ரோல்,  டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் ஒரு லிட்டர் 102 ரூபாய் 63 காசுகளுக்கும்,  டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு.. வாகன ஓட்டிகள் கடும் அவதி..

இந்நிலையில் சென்னையில்  பல்வேறு இடங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எழும்பூர், புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை,  அண்ணா சாலை , அடையாறு என பல முக்கிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது நாளாக இன்றும்  டீசல் இல்லை என்ற பலகை பல பங்குகளிலும் வைக்கப்பட்டுள்ளது.  பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களுடைய உற்பத்தியை குறைத்துள்ளன.  மேலும், மணலியில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தில் பணியை 70% ஆக குறைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

 கச்சா எண்ணையின் வரத்தை குறைந்து இருப்பதால் சென்னையில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இதேபோல் திருவள்ளூர்,  காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் டீசல் வழங்கி வருகிறது.  சென்னையில் டீசலுக்கு  தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக  இந்த மாவட்டங்களில் உள்ள பங்குகளிலும்  தட்டுப்பாடு நிலவுகிறது.