3 மாதங்களாக பொருட்கள் வாங்கவில்லை.. 13 லட்சம் ரேஷன் கார்டுகள் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு??..

 
ration card


தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதங்களாகப் பொருட்கள் வாங்காத 13,11,716 குடும்ப அட்டைகள்  தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  
 
தமிழகத்தில்  கடந்த 2016ஆம் ஆண்டு ஆதார் எண் அடிப்படையில் குடும்ப அட்டைகள் கணினி  மயமாக்கும் முறை கொண்டு வரப்பட்டது. அதன்படி,  மாநிலம் முழுவதும் 2 கோடியே 60 லட்சம்  குடும்ப அட்டைகள் கணினி மயமாக்கப்பட்டு , செல்ஃபோன் எண்களும் இணைக்கப்பட்டன.   அத்துடன்  குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் இல்லாமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று அறிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் பல போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டன. பொங்கல் பரிசு தொகுப்பு, அரசு நலத்திட்ட மற்றும் நிவாரண உதவிகளும் ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்படுவதால், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்திருக்கிறது.  

ration shop

அதேநேரம் அண்மைக்காலமாக குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வாங்குவது  குறைந்து வருகிறது. ஆகையால்  போலி குடும்ப அட்டைகளாக இருக்குமோ என  விசாரிக்க தமிழ்நாடு உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி  கடைசி 3 மாதங்களாகப் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைகள் விவரத்தை ரேஷன் கடை ஊழியர்கள் சேகரித்து வருகின்றனர்.  அந்தக் குடும்ப அட்டைதாரர்களை மொபைல் போனில் அழைத்து எதற்காகப் பொருட்கள் வாங்கவில்லை என்ற காரணங்களைக் கேட்டு அதனைப் பதிவு செய்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புகின்றனர்.

ration

அதன்படி தமிழகம் முழுவதும்,   13,11,716 குடும்ப அட்டைகளுக்கு அண்மைக் காலமாகப் பொருட்கள் வாங்கப்படாமல் இருப்பதாக  மாவட்ட வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார்.    இந்த அட்டைகளின் விவரங்களைப் பற்றி விசாரிக்க  உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவதற்காக விசாரிக்கப்படவில்லை என்றும்,  பலகட்ட விசாரணை, வாய்ப்புகளுக்குப் பிறகே அந்த நடவடிக்கை எடுக்கப்படும் அவர்கள் கூறுகின்றனர்.