வெள்ளியங்கிரி மலைப்பாதைக்கு மே முதல் பக்தர்கள் செல்ல தடை

 
velliangiri

கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வனப்பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி மலைப்பாதைக்கு மே முதல் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை என வனத்துறை அறிவித்துள்ளது.

வெள்ளியங்கிரி மலை கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் ஆகும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை தென்கயிலை என்று அழைக்கப்படும் ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 5000 அடி,) இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்கள் உள்ளிட்டவை உள்ளன. இதனால் இங்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயண்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.   

Velliangiri

இந்நிலையில், போலுவாம்பட்டி வனப்பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி மலைப்பாதைக்கு மே மாதம் முதல் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை என வனத்துறை அறிவித்துள்ளது. கோடைகாலத்தில் உணவு, தண்ணீருக்காக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதாலும், கோடை காலத்தில் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்புள்ளதாலும் வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக வெள்ளியங்கிரி மலைப்பாதைக்கு செல்ல திட்டமிட்டிருந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.