திமுகவுக்கு எதிரான மெகா கூட்டணிக்கு நேசக்கரம் நீட்டுவோம் - டிடிவி தினகரன்..

 
 டிடிவி  தினகரன்

 திமுகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதற்கு எப்போதும் நேசக்கரம் நீட்டுவோம் என  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி, நேற்று நாமக்கல்லில்  பொதுக்கூட்ட மேடையில் பேசியபோது,  மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், திமுக என்கிற தீயசக்தியை வருங்காலத்தில் வீழ்த்த வேண்டுமன்றால் எந்த மெகா கூட்டணி அமைக்கிறவர்களாக இருந்தாலும் சரி நேசக்கரம் நீட்டுவோம் என டிடிவி தினகரன் கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.  

எடப்பாடி

தஞ்சாவூரில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன், திமுக என்கிற தீய சக்தியை வீழ்த்துவதற்காக சட்டமன்ற பொதுத் தேர்தலின்போதே நான் விட்டுக்கொடுத்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போதும் சொல்கிறேன், திமுக என்கிற தீயசக்தியை வருங்காலத்தில் வீழ்த்த வேண்டுமன்றால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் அவர்கள் யாராக இருந்தாலும் சரி, எங்கேயிருந்தாலும் சரி, எந்த மெகா கூட்டணி அமைக்கிறவர்களாக இருந்தாலும் சரி, மற்றவர்களைப் பார்த்து கேவலமாக பேசுகிறவர்களாக இருந்தாலும் சரி கூட்டணி அமைத்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும்.

நாங்கள் 5 ஆண்டுகளாக அமமுக என்ற இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதனால் நாங்கள், திமுகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதற்கு எப்போதும் நேசக்கரம் நீட்டுவோம். கூட்டணிக்கான தலைமை குறித்தெல்லாம் அந்த நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம்" என்று கூறினார்.