அதிமுக மெகா கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு 1% கூட இடமில்லை - பழனிசாமி திட்டவட்டம்..

 
அதிமுக எடப்பாடி பழனிசானி ( இபிஎஸ் )


அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் அமமுகவுக்கு ஒரு சதவீதம் கூட இடம் கிடையாது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை பெய்தது.  122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  ஒரே நாளில் 44 செ.மீ மழை பெய்ததால், சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.  அத்துடன் ஏராளமான குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்ததால்,  சீர்காழி பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  இந்த நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி,   மழை பாதிக்கப்பட்ட சீர்காழி  பகுதிகளை நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிமுக

மேலும், சீர்காழி அருகே உள்ள  நல்லூர், பன்னீர்க்கோட்டம், ஆலங்குடி உள்ளிட்டப் பகுதிகளில் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகள், குறைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக பிரதான கட்சியாக இருக்கிறது . வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைவது உறுதி  என்றார்..  ஆனால் அந்த மெகா கூட்டணியில்  டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 1% கூட இடம் கிடையாது என்று தெரிவித்தார்.  

 டி.டி.வி.,

முன்னதாக  அதிமுக தலைமையான கூட்டணியில் இணையத் தயார் என டிடிவி தினகரன் அறிவித்திருந்த நிலையில், அதற்கு 1 % கூட வாய்ப்பில்லை என  எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும்,  பாஜக ஒரு தேசிய கட்சி.. அதிமுக வேறு, பாஜக வேறு என்றார்.  அத்துடன் சொந்த வேலையாக தமிழகம்  வரும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை  தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.  இந்த ஆய்வின் போது முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், பி.வி. பாரதி வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டர் உடன் இருந்தனர்.