ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வாக்கு சேகரிப்பை தொடங்கிய திமுக

 
dmk

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடவுள்ளது.   

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளது. இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றிக்கனியைப் பறித்து தரும் வகையில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து திமுக தொண்டர்கள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். அதன் ஒரு முக்கிய அங்கமாக, அமைச்சர் முத்துசாமி தலைமையில் வீடு வீடாக சென்று, வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளது. வாக்கு சேகரிக்கும் இந்த பணியானது ஈரோடு பெரியார் நகரில் இருந்து துவங்கி, தொடர்ந்து தொகுதி முழுவதும் நடைபெற உள்ளது.