நாங்கள் புகார் அளித்ததன் விளைவாக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி செல்கிறார்! - டி.ஆர்.பாலு பேட்டி

 
tr baalu

நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம் என திமுக எம்.பி. டி.ஆர். பாலு கூறியுள்ளார். 

சட்டப்பேரவையில், தமிழக அரசு எழுதிக்கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி சரிவர வாசிக்காதது குறித்து, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததொ தொடர்பாகவும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் கொண்ட குழுவினர் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக சட்டப்பேரவையில் நடந்த சம்பவதொடர்பாகவும், அவதூறு கருத்துக்கள் தொடர்பாகவும் டெல்லி மேலிடத்தில் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் டெல்லியில் இருந்து திரும்பிய டி.ஆர்.பாலு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழக ஆளுநர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி, ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து சொல்லிவிட்டு வந்துள்ளோம். கவர்னர் ரவி டெல்லி செல்ல இருப்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம். ஜனாதிபதியிடம் நாங்கள் என்ன பேசினோம் என்பதை முழுமையாக தெரிவிக்க முடியாது. நாங்கள் என்ன பேசினோம் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பொது இடத்தில் பகிரங்கமாக கூற முடியாது.  இவ்வாறு கூறினார்.