எதிர்க்கட்சி போல வெளிநடப்பு செய்கிறார் தமிழக ஆளுநர் - கனிமொழி விமர்சனம்

 
kanimozhi

சட்டமன்றத்தில் இருந்தோ அல்லது நாடாளுமன்றத்தில் இருந்தோ எதிர்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள், ஆனால் இங்கு ஆளுநர் வெளிநடப்பு செய்வது அவர் எதிர்க்கட்சியாக செயல்படுவதையே காட்டுவதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழக சட்ட சபையில் ஆளுநர் நேற்று உரையாற்றியபோது திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்து தவிர்த்தார்.  இதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காதது அவையில் சலசலப்பு ஏற்படுத்தின.  உடனே ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதனால் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளி நடப்பு செய்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Assembly

இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி கூறியதாவது: சட்டமன்றத்தில் இருந்தோ அல்லது நாடாளுமன்றத்தில் இருந்தோ எதிர்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால் இங்கு ஆளுநர் வெளிநடப்பு செய்திருக்கிறார். அவர் எதிர்கட்சியாக செயல்படுகிறார் என்பதையே அவரின் வெளிநடப்பு உணர்த்துகிறது. ஆளுநரை தூண்டி விட்டு செயல்படுபவர்கள் இது ஜனநாயக நாடு என இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆளுநரின் வெளிநடப்பு என்பது அப்பட்டமான மரபு மீறல். இவ்வாறு கூறினார்.