திமுக உட்கட்சி தேர்தல் : மாவட்டங்கள் மாற்றியமைப்பு.. 22ம் தேதி வேட்புமனு தாக்கல்..

 
அறிவாலயம்


திமுக உட்கட்சித் தேர்தலுக்கு வருகிற 22 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அத்துடன்  கட்சியின் நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.   

திமுகவில் கிளை, பேரூர்க்கழகம், மாநகர வட்டக்கழகம், ஒன்றிய- நகர- மாநகர பகுதிக்கழகம், மாநகரக் கழகம், மாவட்டம் என பல்வேறு கட்டங்களாக 15 ஆவது உட்கட்சித் தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து துறைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக 15வது பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்ற பின்வரும் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் மூவர் (கட்டாயமாக ஒருவர் பொதுத் தொகுதியினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்), பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் (மகளிர் ஒருவர் கட்டாயமாக இருத்தல் வேண்டும்) ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து கீழே குறிப்பிட்டுள்ள நாட்களில் பொறுப்பு ஒன்றுக்கு ரூ.25,000 கட்டணமாக தலைமைக் கழகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

துரைமுருகன்

மேலும், வேட்புமனுக்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர்/ஒன்றிய/நகர/நகரிய/பகுதி/ மாநகர செயலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதிகளாகத்தான் இருக்க வேண்டும். வேட்புமனு விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் கழக நிர்வாக வசதிக்காக  கோவை, திருப்பூர், தருமபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளும் மாற்றப்பட்டுள்ளன.  

திமுக உட்கட்சி தேர்தல் : மாவட்டங்கள் மாற்றியமைப்பு..  22ம் தேதி வேட்புமனு தாக்கல்..