தேமுதிக 18ம் ஆண்டு துவக்க நாள் - தொண்டர்களுக்கு விஜயகாந்த் கடிதம்..!

 
vijayakanth

தேமுதிக தொடங்கி நாளையுடன் ( செப் 14)  17 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

அதில், “பல்வேறு சவால்களை தாண்டி நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிவடைந்து 14.09.2022 அன்று 18 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.   கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடங்கப்பட்ட தேமுதிக தொடர்ந்து மக்களுக்காக மக்கள் பணி ஆற்றி தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது.

தேமுதிக

 தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு என்றுமே ஒரு தனி வரலாறு உண்டு. தேமுதிக ஜாதி, மதம், ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்சியாக தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு துவங்கப்பட்ட இயக்கமாகும்.  எந்த கட்சியில் இருந்தும் பிரிந்து வராமல் ஜாதி, மதத்தை வைத்து கட்சி ஆரம்பிக்காமல் சுயம்புவாக மக்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட நமது கட்சி , இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தமிழகம் முழுவதும் கிளைகள் மற்றும் பூத்துகளை அமைத்து வெற்றிநடை போடுகிறது.    லஞ்சம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக அனைத்து துறைகளிலும் முன்னேற்ற உறுதி கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக.

 லட்சகணக்கான தொண்டர்களின் உண்மையான உழைப்பால்  உருவான நமது கழகம், முதலில் ரசிகர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்டு, 2000மாவது ஆண்டு ரசிகர் மன்றத்திற்கு என கொடி அறிமுகப்படுத்தி பின்னாளில் அரசியல் கட்சியாக மாறி மக்களின் ஆதரவோடு தமிழக சட்டமன்ற எதிர்கட்சியாக உயர்ந்தது. இதற்கு உண்மையான தொண்டர்களும், நிர்வாகிகளும் தமிழக மக்களும் தான் காரணம். என் தொண்டர்கள் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன். கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை யாரிடமும் பணத்தை வசூல் செய்யாமல், சொந்த உழைப்பில் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை கொண்டுதான் கட்சியை வளர்த்து வருகிறோம். இதற்கு நமக்கு  கிடைத்த கழகத்தின் நரம்புகளாகவும், இரத்த நாளங்களாகவும் செயல்படும் தொண்டர்கள் தான் காரணம்.

தேமுதிக 18ம் ஆண்டு துவக்க நாள் - தொண்டர்களுக்கு விஜயகாந்த் கடிதம்..!
எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், சூழ்ச்சிகள், வந்த போதும் பல சவால்களை சந்தித்து தற்போதும் வீறுநடை போடுகிறது நமது கழகம். தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம்.  அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மீண்டும் எழுச்சி பெறும்.  நாம் எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் நமது இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம்.  தற்போது நடந்து கொண்டிருக்கும் உட்கட்சி தேர்தலை சீறும் சிறப்புமாக முடித்து தொடர்ந்து நமது கட்சியின் வளர்ச்சிக்காக அனைத்து வியூகங்களை அமைப்போம்.

தேமுதிக 18ம் ஆண்டு துவக்க நாள் - தொண்டர்களுக்கு விஜயகாந்த் கடிதம்..!

தேமுதிக 18ஆம் ஆண்டு துவக்க நாளையொட்டி  தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் – பகுதி – வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் உங்கள் பகுதியிலேயே கழக கொடியை ஏற்றி, இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே’ என்கிற கொள்கையின் அடிப்படையில், ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து கழக துவக்க நாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் முப்பெரும் விழாக்கள், பொது கூட்டங்களுக்கு பேராதரவு அளித்து நமது கழகம் வீறுநடை போட்டு வெற்றியடைய அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்று உறுதியோடு நாம் அனைவரும் பயணிப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.