தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா - டிஜிபி சைலேந்திரபாபு

 
dgp sylendra babu

தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை இயக்குநா் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூா் தெற்கு காவல் நிலையம் அருகேயுள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் கண்காணிப்பு மையத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நூறு சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன. ஒரு காவல் நிலையத்தில் மட்டும் வேலை நடைபெறுகிறது.
  

dgp sylendrababu

தஞ்சாவூா் மாநகரில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 5.50 கோடியில் 1,400 கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றங்களைக் குறைக்க வேண்டும் என்பதே நோக்கம்.குறிப்பாக, வாகனங்களில் மோதிவிட்டு தப்பிச் செல்பவா்களின் புகைப்படம், வாகன எண்ணைக் கண்டறிந்துவிட முடியும். திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றங்களைச் செய்துவிட்டு தப்பித்துச் செல்பவா்களையும், கடத்துபவா்களையும் கண்டறிவதற்கு இந்த கேமராக்கள் உதவியாக இருக்கும். தூய்மையான நகரம், குற்றங்கள் இல்லா நகரம் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். தஞ்சாவூரில் நிகழ்ந்த 5.50 கிலோ தங்க நகைகள் கொள்ளை வழக்கில் முக்கியமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளோம். விரைவில் நகைகளை மீட்பதற்கான பணியில் தனிப்படையினா் ஈடுபட்டுள்ளனா். இவ்வாறு கூறினார்.