சினிமாவுக்காக உயிரை விடாமல், உழைத்து குடும்பத்தை காப்பாற்றுங்கள் - டிஜிபி வேண்டுகோள்

 
DGP

சினிமா படங்களை கொண்டாடுவதை தவிர்த்துவிட்டு இளைஞர்கள் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சென்னை கோயம்பேட்டில் உள்ள 'ரோகிணி' தியேட்டரில் துணிவு படத்தை பார்ப்பதற்காக வந்த,  சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ஜானகிராமன் என்பவருடைய மகன் பரத்குமார் அந்த வழியாக மெதுவாக சென்ற கன்டெய்னர் லாரி மீது ஏறி நின்று ஆட்டம் போட்ட போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது முதுகு தண்டுவடம் உடைந்த நிலையில்,  உடனடியாக பரத்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரத்குமார், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில் தமிழக டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது. இளைஞர்கள் பொறுப்போடு இருக்க வேண்டிய சூழலில் இதுபோன்ற சம்பவத்தால் குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வாகனங்களில் ஏறுவது, கட் அவுட்டுகள் மீது ஏறுவது மிகவும் ஆபத்தான செயல்கள். இளைஞர்கள் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும். டேங்கர் லாரி, கட் அவுட்களில் ஏறி உயிரிழக்கும் போது அந்த குடும்பமே சிரமப்படுகிறது. கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுப்பட வேண்டாம். இவ்வாறு கூறினார்.