"வழிப்பறி கொள்ளையாகும் சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்" - முத்தரசன் வலியுறுத்தல்!!

 
mutharasan

 சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

toll

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய அரசின் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்னும் நவதாராளமயக் கொள்கை அமலாக்கத்தில் தேசிய
நெடுஞ்சாலைகளும், மாநில நெடுஞ்சாலைகளும் தனியார்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் நாடு முழுவதும் சுங்க சாவடிகள் அமைத்து கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு இருமுறை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி இன்று முதல் (01.09.2022) கார், வேன் போன்ற சிறயரக வாகனங்களுக்கு ரூ.10/-ம், பயணிகள் பேருந்துக்கு தலா ரூ.20/-ம், சரக்கு வாகனங்களுக்கு ரூ.150/- வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. 

mutharasan

தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் தினசரி ரூ.135 கோடி கட்டணம் செலுத்தி வரும் வாகன உரிமையாளர்கள் மேலும் அதிக சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைவாசி அதிகரித்து மக்கள் வாழ்வில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் நலனை பலியிட்டு பன்னாட்டு நிறுவனங்களின் சட்டப்பூர்வ கொள்கைக்கு வழியமைத்து வரும் பாஜக ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. உயர்த்தப்பட்ட சுங்கக் கட்டணத்தை ரத்து செய்து, விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.