4 வயது சிறுமிக்கு சூடு வைத்து... துன்புறுத்தி... அடித்துக் கொலை - தம்பதி வெறிச்செயல்

 
murder arrest

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே 4 வயது சிறுமியை தங்களது வீட்டிக்கு அழைத்துச் சென்று பார்த்துக்கொள்வதாக கூறி சூடு வைத்து அடித்து துன்புறுத்தி கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருவள்ளூர் நகரில் வசித்து வருபவர்கள் பிரகாஷ்- கவுரி தம்பதி. இவர்களுக்கு ஷிவானி என்ற 4 வயது மகள் இருந்து வந்தாள். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தனர். இந்நிலையில், மல்லிகாவின் உறவினர்களான திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த ராஜேஷ்குமார்-கீர்த்திகா தம்பதி அடிக்கடி மல்லிகாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். அவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், கவுரியின் மகள் ஷிவானியுடன் அன்பாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், ஷிவானியை தங்களுடன் சிறிது நாட்கள் அனுப்பி வைக்குமாறு கீர்த்திகா வேண்டுகோள் விடுத்த நிலையில்,  அவர்களுக்கு குழந்தை என்ற காரணத்தினால் கவுரி பாவப்பட்டு ஷிவானியை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார். 

இந்நிலையில், அவர்களுடன் சென்ற ஷிவானி வீட்டில் வழுக்கி விழுந்து காயமடைந்ததாக கூறி கீர்த்திகா மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிறுமியின் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் இருந்துள்ளது. இதனிடையே அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேஷ்குமார்-கீர்த்திகா தம்பதியை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.  

arrest

கீர்த்திகா சிறுமி ஷிவானியை தன்னுடன் செங்குளத்துபட்டிக்கு அழைத்து வந்து தனது வீட்டில் வைத்திருந்தார். அப்போது அந்த சிறுமி அடிக்கடி சேட்டைகள் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கல் நெஞ்சம் படைத்த கீர்த்திகாவும், ராஜேஷ்குமாரும் சேர்ந்து சிறுமி என்றும் பாராமல் ஷிவானியின் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அதோடு கடந்த 2-ந்தேதி ஷிவானி வீட்டுக்குள் இயற்கை உபாதை கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கீர்த்திகா, ஷிவானியை பிடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் ஷிவானிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது மயங்கி விழுந்த சிறுமியை கீர்த்திகா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஷிவானி கொண்டு செல்லப்பட்டாள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துபோனாள். கீர்த்திகா தாக்கியதால் சிறுமி உயிரிழந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமார், கீர்த்திகாவை கைது செய்தனர். 4 சிறுமி என்றும் பாராமல் அடித்து துன்புறுத்தி, சூடுவைத்ததோடு அடித்து கொலை செய்த தம்பதியின் ஈவு இரக்கமில்லாத செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.