தொடரும் அநீதி.. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை துன்புறுத்தும் காவல்துறை - பா.ரஞ்சித் கண்டனம்..

 
pa ranjith


வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள காவல்துறையினர் மிரட்டி வருவதாக இயக்குநர் பா.இரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.
 
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்து வரும் பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக வெள்ளனுர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வந்தது. இருப்பினும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த நபர்கள்  இதுவரை கைது செய்யப்படவில்லை.  இதனிடையே இந்த  விவகாரம் தொடர்பாக  திருச்சி சரக டிஐஜி தரப்பில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

நீர்தேக்க தொட்டியில் மலம்
 
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று  சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள்  விரைந்து கைது செய்யப்படுவார்கள் என்றும், இதுவரை 70 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார். இந்த நிலையில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக் கொள்ள காவல்துறையினர் மிரட்டி வருவதாக இயக்குநர் பா.இரஞ்சித் குற்றம் சாட்டியிருக்கிறார்.

 இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள பதிவில், “தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்! வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.