வைகோ, திருமாவளவனுடன் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு

 
vaiko and evks

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க கோரி, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வைகோ மற்றும் திருமாவளவனை சந்தித்து ஆதரவு கோரினார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்தது. இதனிடையே காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோல் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவித்தார். அதிமுகவை பொறுத்தவரையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இருதரப்பினர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளதால் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

evks elangovan

இதனிடையே காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இன்று காலை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து ஆதரவு கோரினார்.