ஸ்ரீமதியின் மறு உடற்கூறாய்வு பரிசோதனை நிறைவு - நாளை மறுநாள் அறிக்கை தாக்கல்

 
srimathi

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  3 மணி நேரமாக நடைபெற்ற பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மறு உடற்கூறாய்வு பரிசோதனை நிறைவடைந்தது.

Tamil Nadu Srimathi Suicide Post Mortem Report Behind the 12th Class  Student Girl Death

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உடல் மறு உடற்கூறாய்வு பரிசோதனை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிற்பகல் 4 மணி அளவில் தொடங்கி சுமார் 3 மணி நேரமாக நடைபெற்ற இந்த மறு உடற்கூறாய்வு பரிசோதனை மாலை 7 மணி அளவில் நிறைவடைந்தது.

இந்த மறு உடற்கூறு பரிசோதனையை விழுப்புரம் மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி மருத்துவர் ஜீலியட் ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுல்நாத், தடவியல் நிபுணர் ஓய்வு பெற்ற அதிகாரி சாந்தகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மறு உடற்கூறாய்வு பரிசோதனை செய்தனர். மேலும் இந்த மறு உடற்கூறாய்வு பரிசோதனை சிபிசிஐடி எஸ்.பி ஜியாஉல்ஹக் மற்றும் கூடுதல் எஸ்பி கோமதி முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி மாணவியின் பெற்றோருக்கு மறு உடற்கூறாய்வு தொடர்பாக  நோட்டீஸ் உயிரிழந்த மாணவியின் வீட்டில் வேப்பூர் வட்டாட்சியர் மூலமாக ஒட்டப்பட்டது. அதில் மாணவி பெற்றோர் சார்பில் தந்தை இந்த மறு உடற்கூறாய்வு பரிசோதனையில் பங்கு பெறலாம் என்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் பெற்றோர் தரப்பில் இந்த மறு உடற்கூறாய்வு பரிசோதனையில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக பிணவறையில் இருந்து பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் கொண்டுவரப்பட்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள எக்ஸ்ரே அறையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று மணி நேரமாக நடைபெற்ற பள்ளி மாணவி மறு உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கை நாளை மறுநாள்  ஜூலை 21 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் போது தாக்கல் செய்யப்படும் என்றும் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மறு உடற்கூராய்வு பரிசோதனை நிறைவடைந்ததை பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மூலமாக பிரேத பரிசோதனை நிறைவடைந்ததாகவும் ஸ்ரீ மதியின் பிரேதத்தை வாங்கி செல்லுமாறும் பெரிய நெசலூரில் உள்ள அவர்களது இல்லத்தில்  கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் விஜயபிரபாகரன் மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.