கட்டெறும்பு, ஆரஞ்சு மிட்டாய் யூடியூப் சேனல்களை முடக்கக்கோரி புகார்

 
youtube

பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனலை முடக்கி கைது செய்யவேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோக்கள் செய்து அதை தங்களது யூடியூப்பில் வெளியிட்டு செய்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ, தனி மனித சுதந்திரத்திற்கு கெடுக்கும் வகையிலோ பிராங்க் வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவிட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து சேனல்கள் முடக்கப்படும் என கோவை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோக்களை எடுத்து அதை பதிவிடும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மைலாப்பூரை சேர்ந்த ரோஹித் குமார் புகார் அளித்துள்ளார்.

அதில் பொது இடங்களில் கேமராவை மறைத்து வைத்துவிட்டு எந்த வித அனுமதியும் பெறாமல், முதியோர்கள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் வகையில் சில யூடியூப் சேனல்கள் பிராங்க் வீடியோ எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழ் கலாச்சாரம் சீரழிந்து பலர் மன உளைச்சலுக்கு தள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கட்டெரும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல், நாகை 360 ஆகிய சேனல்களை உடனடியாக முடக்கி சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.