வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக ஆர்பி உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார்

 
rb udhyakumar

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வழக்கறிஞர் கடந்த 12ஆம் தேதியன்று தமிழக ஊழல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கடந்த 2016-2021 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பதவியில் இருந்த ஆர்.பி.உதயகுமார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிகளவிற்கு சொத்து குவித்துள்ளதாகவும், மேலும் தனக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் மூலமாக பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும் , அம்மா ட்ரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் மூலமாக பொதுமக்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி முறைகேடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தினேஷின் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக லஞ்ச ஒழிப்புத்துகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் புகார்தாரரான வழக்கறிஞர் தினேஷ் இன்று மதுரை அழகர்கோவில் சாலை பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் குறித்த விசாரணைக்காக வந்தார். இதனையடுத்து புகார்தாரர் வழக்கறிஞர் தினேஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறை துணைகண்காணிப்பாளர் புகார்தன்மை குறித்தும், புகாரில் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.