வனத்துறையில் பல லட்சம் ஊழல்- திண்டிக்கல் சீனிவாசனிடம் விசாரணை நடத்த தமிழக அரசுக்கு கோரிக்கை

 
srinivasan

கடந்த அதிமுக ஆட்சியில் வனத்துறை சார்பாக திண்டுக்கல் மலைக்கோட்டையை பசுமையாக்குவதாக கூறி பல லட்சம் ஊழல் செய்ததாக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மீது புகார் எழுந்துள்ளது.

Power to Dindigul Srinivasan'- Banks accept Edappadi Palaniswami's letter  News JANI | News Jani

கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழக வனத்துறை அமைச்சராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் பேரில் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் சுதந்திர போராட்டத்தில் நெருங்கிய தொடர்புடைய திண்டுக்கல் மலைக்கோட்டையை பசுமை மிக்கதாக மாற்ற அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது. இதற்காக திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேலே உள்ள பாறைகளில் வளரக்கூடிய அத்தி, அரசு, ஆல், இச்சி, கல் இச்சி உள்ளிட்ட பல வகை மரங்களை நடவு செய்து அதனை  சொட்டு நீர் பாசனம் மூலம் வளர்க்க முடிவு செய்து கடந்த 2017-18ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானிய கோரிக்கையின் போது ஒரு மரம் வளர்க்க ஆயிரம் வீதம் 5,000 மரங்களை நடவு செய்து மரங்களை வளர்க்க 50 லட்சம் செலவு செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாக மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.


அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மலைக்கோட்டையில் அத்தி அரசு ஆல், இச்சி, கல்இச்சி போன்ற மரங்கள் பாறையில் இடுக்குகளில் நடவு செய்யப்பட்டது. இதற்கான விழாவில் அப்போதைய வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்டு மரங்களை நட்டார். பாறைகளில் நடப்பட்ட மரச் செடிகளுக்கு  சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் விட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மரங்கள் நடப்பட்டதோட சரி அதன்பின் மரத்தினை வளர்க்க வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் 5,000 மரங்கள் நடப்பட்ட இடத்தில் தற்போது ஒரு மரம் கூட வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் கூறுகையில், “திண்டுக்கல் மலைக் கோட்டையானது பிரதான வரலாற்று நினைவுச் சின்னம் ஆகும்.  இந்த மலைக் கோட்டையினை பசுமைப்படுத்தும் விதமாக கலந்த 2017 18 ஆம் ஆண்டில் அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரையின் பேரில் வனத்துறை அமைச்சராக திண்டுக்கல் சி சீனிவாசன்  வனத்துறை மானிய கோரிக்கையில்  திண்டுக்கல் மலைக்கோட்டையில் அத்தி, ஆள், அரசு, கல்இச்சி போன்ற  5,000 மரங்களை நட்டு திண்டுக்கல் மலைக்கோட்டை பசுமை படுத்துவது என்று வனத்துறை மானிய கோரிக்கையில் அறிவித்தார்கள். ஆனால்  பணிகள் முழுமையாக நிறைவேறவில்லை. 

திண்டுக்கல் மலைக்கோட்டையில் 5000 மரக்கன்றுகள் நடப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் மூலமாக தண்ணீர் விடுவதற்கான டியூப்புகள் அமைக்கப்பட்டது ஆனால் 5000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை ஒரு மரக்கன்று நடுவதற்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கிடையாது அதனை நட்டு பராமரிப்பு செய்வதற்காக ஆயிரம் ரூபாய் என்று 5000 கன்றுகளுக்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது தற்போது ஐந்து ஆண்டுகள் முடிந்து மலைக்கோட்டையில் பார்க்கும் பொழுது அங்கு ஒரு மரம் கூட நிலையாக நிற்கவில்லை இந்த மரம் நடுவதற்கு பயன்படுத்திய டிரம்கள் தண்ணீர் பாய்ச்சுவதற்கு பயன்படுத்திய சொட்டுநீர் பைபுகள் மலைக்கோட்டை சுற்றி குவித்து வைக்கப்பட்டிருக்கிறது இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டுகிறது. 

 ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தை வைத்து ஒரு மலைக்கோட்டையை பசுமை படுத்துகிற பணியை செய்கிறோம் என்று சொல்லி வனத்துறை மானிய கோரிக்கையில் வனத்துறை அமைச்சர் பெயரளவில் சில டிரம்முகளை வைத்து மரக்கன்றுகளை நட்டு அதனை பராமரிக்காமல் விட்டு விட்டனர்.  இதில் மிகப்பெரிய ஊழல்  நடந்து உள்ளது என்று நாங்கள் குற்றம் சாட்ட விரும்புகிறோம் இதனால் அன்றைக்கு வனத்துறை அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் பணம் ஐம்பது லட்சம் ரூபாய் வீணடிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது ஆகவே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.