இரட்டை அர்த்தத்தில் பேசிய திமுக பேச்சாளர் மீது காவல் ஆணையரிடம் புகார் - பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம்

 
b

குஷ்பூ, நமிதா, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகிய பாஜக பெண் நிர்வாகிகளை இழிவு படுத்தி பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக மகளிர் அணி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  பாஜக மகளிர் அணி சார்பில் சைதை சாதிக்கை கண்டித்து விரைவில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

s

 கடந்த 26 ஆம் தேதி அன்று சென்னை ஆர். கே. நகர் பகுதியில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் திமுக தென் சென்னை சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் சைதை சாதிக்,   தலைவர்களை வைத்து கட்சியை வளர்க்கிறது திமுக.  ஆனால் பாஜகவோ நடிகைகளை வைத்து கட்சியை வளர்க்கிறது என்று சொல்லி குஷ்பூ, காயத்ரி ரகுராம், கௌதமி, நமீதா ஆகிய நான்கு நடிகைகளையும் ஒருமையில் பேசி,   இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசினார் . 

இந்த வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், குஷ்பூ இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ,திமுக எம். பி. கனிமொழி இதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.   ஆனாலும் திமுக கட்சி சைதை சாதிக் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பாஜக மகளிர் அணியினர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

kk

 இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் நதியா சீனிவாசன்,    ’’பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவான வார்த்தையால் இழிவுபடுத்தும் வகையில் சைதை சாதிக் பேசியது கண்டிக்கத்தக்கது.  சைதை சாதிக் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

 அவர் மேலும்,  திமுக நிர்வாகிகள் பெண்களை தொடர்ந்து விமர்சித்து வருகின்றார்கள்.  திண்டுக்கல் ஐ. லியோனி பெண்கள் இடுப்பு குறித்து பேசினார்.  அமைச்சர் பெண் மேயரை மிரட்டுவதும்,  பெண்களை ஓசியில் பயணம் செய்வதாக சொல்வதும் தொடர்ந்து இப்படி நடந்து வருகின்றனர்.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அம்மா தண்ணீர் 10 ரூபாய் என்று ஸ்டாலின்  பேசியதால் 2016 இல் திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது . 

கனிமொழி வெறும் மன்னிப்பு என பதிவிட்டதை தவிர சம்பந்தப்பட்ட நபர் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  திமுகவை பொருத்தவரைக்கும் கனிமொழிக்கே இந்த நிலைமைதான்.  தொடர்ந்து திமுகவினர் பெண்களை தவறாக பேசினால் பாஜக மகளிர் அணி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார்.