அம்மா உணவக ஊழியர்கள் உணவுப்பொருட்கள் பதுக்கலில் ஈடுபடுவதாக புகார்

 
amma unavagam

அம்மா உணவக ஊழியர்கள் உணவுப்பொருட்கள் பதுக்கலில் ஈடுபடுவதாக  சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய ஆதாரத்தோடு புகார் அளித்தால் தகுந்த  நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டமானது ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் நேரமில்லா நேரத்தில் பேசிய 138 -வது வார்டு உறுப்பினரான திமுக வை சேர்ந்த கண்ணன் அம்மா உணவகங்களில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாக  குற்றச்சாட்டை எழுப்பினார். அப்போது பேசிய அவர், அம்மா உணவக ஊழியர்கள் வருகைப்பதிவேடு முறையாக பராமரிக்கப்படுவதில்லை. 12 மணி வரை ஆகியும் சில ஊழியர்கள் வருகை பதிவேடில் கையெழுத்து இடாமல் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது.


அதேபோல பயனாளிகளுக்கு வழங்கப்படும் டோக்கனை அவர்களே வழங்குவதால் 100 டோக்கன்களுக்கு பிறகு மீண்டும் அதே டோக்கனை பயன்படுத்துகின்றனர். அதேபோல, அரிசி, பருப்புகளை கையிருப்பு ஏட்டில் குறிப்பிடுவது ஒன்றாகவும் பயன்படுத்துவது ஒன்றாகவும் உள்ளது. குறிப்பாக 5 கிலோ அரிசி, பருப்பு என எழுதிவிட்டு 2 - 3 கிலோ மட்டுமே பயன்படுத்துவதோடு பதுக்கலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய மேயர் பிரியா, அம்மா உணவங்களுக்கு மாநகராட்சியே டோக்கன் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அதேபோல அம்மா உணவக ஊழியர்கள் தவறு செய்யும் பட்சத்தில் மண்டல அலுவலரிடம் புகார் அளிக்கலாம். பின்னரும் முறைகேடு தொடரும் பட்சத்தில் ஆதாரத்தோடு என்னிடமோ, ஆணையரிடமோ தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.