ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியா?? - ஜன-23ல் ஓபிஎஸ் ஆலோசனை..

 
OPS

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்குவது குறித்து ஓ. பன்னீர்செல்வம் அணி ஜன. 23-ம் தேதி முடிவு எடுக்கவுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில்  போட்டியிட ஒவ்வொரு கட்சியும் தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டி வருகின்றன.  கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடங்கியதை அடுத்து தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த  இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே மீண்டும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

admk office

இதனிடையே எதிர்க்கட்சிகளுக்குள் நிலவும் கூட்டணியில் யார் பெரியவர்கள் என்கிற  போட்டியால் தனித்தனியாக போட்டியிடக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிமுக எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, பாஜக ஆகியவை தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளன.  இதனிடையே அதிமுக, தமாகா இடையே நடைபெற்று வந்த ஆலோசனையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி,  இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.  

admk sc

இந்நிலையில் கூட்டணியை தாண்டி இரட்டை இலை வழக்கு, அதிமுக யாருக்கு என்கிற வழக்கு என  அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணிய களம் இறங்க இருக்கிறதாக தெரிகிறது. இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் அணி ஜன. 23-ம் தேதி முடிவு எடுக்கவுள்ளது. சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளனர். ஜன.23ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதா? இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுவிடும்.  இதற்கிடையே இன்று மாலை வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கு அதிமுக ஏற்பாடு செய்துள்ளது. ஒற்றை தலைமை விவகாரமும் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற சிக்கலும் உள்ள நிலையில் இடைத்தேர்தலை அதிமுக எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.