விசாரணைக் கைதி சிறையில் மரணம்.. உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கனும் - திருமாவளவன்..

திருவண்ணாமலையில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ஒருவர் சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித்த் தலைவர் தொல் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தட்டரணையைச் சார்ந்த தங்கமணி, நீதித்துறைக் காவலில் கிளைச் சிறையிலிருந்த சூழலில் பலியாகியுள்ளார். கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனே உயிரிழந்திருக்கிறார். இது அதிர்ச்சி அளிக்கிறது. அண்மையில் சென்னை விக்னேஷ் காவல்துறையின் விசாரணையில் பலியான துயரத்தைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் இந்த சாவு கவலையளிக்கிறது.
தமிழக அரசு, இதனை 'சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு' உட்படுத்த வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். காவல்துறை மற்றும் நீதித்துறை. கட்டுப்பாட்டில் இத்தகைய சாவுகள் இனி நிகழாமல் தடுத்திட அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பலியான தங்கமணியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கிட வேண்டுமென்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.