இந்தியை எப்படியாவது திணித்துவிடத் துடிக்கும் மத்திய அரசு - டி.ராஜா

 
T Raja

இந்தியை எப்படியாவது திணித்துவிடத் துடிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் மிகவும் கண்டனத்துக்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

மே தினம் மற்றும் சிங்காரவேலர் நூற்றாண்டை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் , அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லக்கண்ணு , மாநில செயலாளர் முத்தரசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மே தினத்தை முன்னிட்டு நல்லக்கண்ணு செங்கொடி ஏற்றி சிறப்பித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ராஜா பேசியதாவது: மே தினம் என்று சொல்லும்போது தமிழ்நாட்டிற்கு தனி சிறப்பு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்  சென்னையில் தான் மே தினம் கொண்டாட பட்டது. 

Raja

தற்போது இந்த நாட்டு மக்கள் எல்லாம் சுரண்டலுக்கு உள்ளாகி உள்ளனர். மோடி அரசு தொழிலாளர்களுக்கு எதிரான, விவசாயத்திற்கு எதிரான அரசாக உள்ளது. மக்கள் உருவாக்கியுள்ள  நாட்டு சொத்துக்களையும், நாட்டு மக்களுக்காக  வைத்துள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்று வருகிறார்கள். 
இந்துத்துவா என்ற கொள்கையின் அடிப்படையில் மத வெறியை தூண்டும் விதத்தில் தான் RSS பாஜக செயல்பட்டு வருகிறது. சிறுபான்மை, தலித் மக்களின் மீது தாக்குதலை நடத்தி  வருகிறார்கள்.மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மாநில நலன்கள் புறக்கணிக்கப்படுகிறது. இந்தியா ஒரு நாடு என்றால் எல்லா மொழியும் தேசிய மொழிதான். மேலும், ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது எனவும் டி.ராஜா தெரிவித்தார்.