இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு - முத்தரசன் அறிவிப்பு

 
mutharasan

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற நாங்கள் பாடுபடுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார் 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமாகா தலைவர் ஜிகே வாசன் இன்று அறிவித்துள்ளார்

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற நாங்கள் பாடுபடுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும்.  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம். இவ்வாறு கூறினார்.