குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை.. குற்றாலத்துக்கு சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்..

 
தற்கொலை


 குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர், தனியார் விடுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.   அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி மதுரை மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த   மகாலிங்கம் (55) ,  அவரது மனைவி காமாட்சி, மகள் தனப்பிரியா ஆகியோ வந்துள்ளனர்.   குற்றாலம் அண்ணா சிலைக்கு அருகில் இருந்த  தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர்கள்,  கடந்த நான்கு நாட்களாக அவர்கள் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளித்து சுற்றிப்பார்த்து வந்துள்ளனர்.  கடைசியாக  நேற்று இரவு 10 மணி வரை அவர்களை விடுதியின் ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

 குற்றாலம் மெயின் அருவி

இந்நிலையில் இன்று காலை அறையை சுத்தம் செய்ய   ஊழியர் சென்றபோது,  அந்த அறையின் கதவு பூட்டியிருந்துள்ளது.  வெகுநேரமாகியும்   அவர்கள் வெளியே வராமல் இருந்ததால் , ஊழியர் உரிமையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். பின்னர் உரிமையாளர் மாற்றுச்சாவி போட்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள்  3 பேரும்  வாயில் நுரை தள்ளியபடி  கிடந்துள்ளனர். பதறிப்போன  அவர்கள்  குற்றாலம் போலீசாருக்கு தெரித்தனர். பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த  போலீசார் அங்கு சென்று பார்த்தபோது மகாலிங்கம், அவரது மகள்  தனப்பிரியா உயிரிழந்த நிலையில்,  காமாட்சி மட்டும்  உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.  

விஷம் குடித்து தற்கொலை

 உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைகாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மற்ற இருவரது உடல்களும் கைப்பற்றப்பட்டு  பிரேத பரிசோதனைக்காக நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் 4 மாதங்களுக்கு முன்னர் மகாலிங்கத்தின் மகன் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதனால் குடும்பத்தினர் மன உலைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.  இருப்பினும்  தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது பற்றி அறிய தொடர்ந்து  விசாரணை  நடத்தி வருகின்றனர்.